சென்னை:பெரம்பலூர் அருகே இறையூர் கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்காக எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலங்களை விட்டு அம்மாவட்ட ஆட்சியர் வெளியேறும்படி கூறுவதாகவும்; கனரா கிராமத்தில் உள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதாகவும் அதனை மூட வேண்டும் எனவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (செப்.19) முதலமைச்சர் தனிச்செயலரிடம் மனு வழங்கிய பின் செய்தியாளரைச் சந்தித்த அய்யாக்கண்ணு, 'நரிக்குறவர் மக்களுக்கு தற்போது மத்திய அரசு, பழங்குடியினர் (ST) சான்றிதழ் வழங்க உள்ளது. நரிக்குறவர் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பெரம்பலூர் மாவட்டம், இறையூர் கிராமத்தில் 353 ஏக்கர் நிலம், 153 நரிக்குறவருக்கு வழங்கப்பட்டன.
40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நரிக்குறவர் இன மக்கள் பன்னிரெண்டு கிணறுகளை வெட்டி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்த இடம் நரிக்குறவர் மக்களுக்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறி வருகிறார். மேலும் இதுகுறித்து இன்றைய தினம் போராட்டம் நடத்தி முதலமைச்சர் தனிச்செயலரிடம் மனு கொடுத்துள்ளோம்.