தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெல்லியில் பெரியார் Vs ஸ்ரீராம்... வாழ்த்துகள் மோடி - நாடாளுமன்றம்

தாங்கள் உயிரிழந்த பிறகும் தங்களது கொள்கைகளால் அதிகாரவர்க்கத்தை  அலறவிட்டு கொண்டிருக்கின்றனர் பெரியாரும், அம்பேத்கரும். அவர்களது பக்தர்களை முதன்முறையாக சந்திக்க இருக்கிறார்கள் ஸ்ரீ ராமர்கள்!

பெரியார்

By

Published : Jun 20, 2019, 11:46 AM IST

மக்களவைத் தேர்தலில் பாஜக இந்திய அளவில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் அக்கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் வழக்கம் போல பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம் திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் மட்டுமே நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளார். அனைத்து எம்.பி.க்களும் கடந்த 18ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளே தமிழ்நாட்டு எம்.பிக்கள் 'வாழ்க பெரியார்', 'வாழ்க அம்பேத்கர்', 'வாழ்க மார்க்சியம்', 'வாழ்க சமத்துவம்' என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்தபோது நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக 37 எம்.பி.க்களுடன் டெல்லிக்குச் சென்றது. அவர்கள் மீது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தது. ஏனெனில், அவர்கள் சென்றது முற்போக்கான, சமத்துவமான மாநிலம் என்று பெயரெடுத்திருக்கும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளாக. ஆனால், தமிழ்நாட்டை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்தபோது அவர்கள் அமைதி மட்டுமே காத்தனர். அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து ஏவப்பட்ட வன்முறைக்கும் அவர்கள் அமைதியே காத்தனர்.

இல்லை, இல்லை அவைகளை எதிர்த்து நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்று அவர்கள் ஊடகம் முன்பு பேசினாலும், அந்த கட்டடத்துக்குள் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். நவநீத கிருஷ்ணன் “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என பாடியதிலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு மவுனம் சாதித்தது வரை அவர்கள் மீது மக்கள் வெறுப்பையே சுமந்துவந்தனர் என்பதற்கான வெளிப்பாடுதான் இந்த தேர்தலின் முடிவு.

நவநீத கிருஷ்ணன்

தற்போது அதே எண்ணிக்கை அளவிலான எம்.பி.க்கள் டெல்லிக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் முதல் நாளே தமிழ்நாட்டு எம்.பி.க்கள் 'இப்படி ஒரு சம்பவம் செய்வார்கள்' என்று பாஜகவினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு எம்.பி.யும் பதவியேற்றுக்கொண்டபோது பெரியாரையும், அம்பேத்கரையும், கருணாநிதியையும், திராவிடத்தையும் முன்வைத்தார்கள். 37 பேரை எதிர்த்து 300-க்கும் மேற்பட்டவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டதன் மூலமே தெரிந்துகொள்ளலாம் இனிவரும் நாட்களில் அந்த நாடாளுமன்றக் கட்டடம் எப்படி அதிரப் போகிறது என்பதை. இதில் ஓபிஆர் மட்டும் விதிவிலக்கு! அனைவரும் இந்த கொள்கையை முன்வைக்க அவர் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முன்வைத்து தனக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டாவை தெளிவாக மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஓபிஆர்

அதிமுக எம்.பி.க்கள் அந்த கட்டடத்திற்குள் இருந்தபோது எப்படி இருந்தோமோ அதுபோல் இந்த முறையும் இருக்கலாம் என மோடியோ, மத்திய அமைச்சர்களோ கனவு கண்டால் அது நிச்சயம் கானல் நீராக மாறிவிடும். ஏனெனில் தற்போது உள்ளே சென்றிருக்கும் 38 பேரில் 37 பேர் சமத்துவத்தை அடிநாதமாக கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியத்தை கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர்கள்.

இந்த முறை மத்திய அரசு கொண்டுவர இருக்கும் ஒவ்வொரு திட்டத்துக்கும் பிரதமரும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டியதாய் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு எம்.பி.க்களில் 37 பேர் கேட்கும் கேள்விகளையும், அவர்கள் காட்டப்போகும் காத்திரமான எதிர்ப்புகளையும் சந்திப்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவும், புதிதாகவும் இருக்கும். ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் மோடி, அவரது சகாக்களின் நாடாளுமன்ற அகராதியில் எதிர்ப்பு என்ற வார்த்தையே இல்லையே!

பிரதமர் மோடி

அதுமட்டுமின்றி, சித்தாந்த ரீதியான கருத்துகளையோ, மோதலையோ அவர் இதுவரை சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற விவகாரத்தில் மட்டுமே அதிமுகவின் எம்.பி.யாக இருந்த தம்பிதுரை சிறிது தமிழ்நாட்டு மனநிலையை பிரதிபலித்தார். ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று அந்த பேச்சும் அடிபட்டுப் போனது.

தம்பிதுரை

ஆனால், தற்போது சென்றிருப்பவர்கள் முதல் நாளிலேயே சித்தாந்த மோதலுக்கான நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். எனவே இந்த நாடாளுமன்ற கட்டடம் சித்தாந்த மோதல்களை நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறது. குறிப்பாக இந்துத்துவா என்ற ஒற்றை கொள்கையையும், 300-க்கும் மேற்பட்டவர்களையும் கொண்டிருக்கும் பாஜகவுக்கு எதிராக, பெரியாரியம், அம்பேத்கரியம், சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகளையும், 37 பேரையும் கொண்டு திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் செய்யப்போகும் சம்பவம் தரமானதாக இருக்கும். அப்படி செய்யவில்லை என்றால் தற்போதைய தேர்தலில் அதிமுக எம்.பி.க்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அடுத்தத் தேர்தலில் நமக்கும் என்பதும் அவர்களுக்கு புரியும்.

தனது ஆசானுடன் பேரறிஞர் அண்ணா

நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசிய பேச்சுக்களையும், அவர் சித்தாந்த ரீதியாக வைத்த வாதங்களையும் டெல்லிவாலாக்கள் கனவிலும் மறக்கமாட்டார்கள். அவரது பேச்சு என்பது பலருக்கும் பாடம். பெரியாரும், அம்பேத்கரும் முழங்கிய மாநில சுயாட்சி, சமத்துவ கோட்பாடுகளை நாடாளுமன்றத்தில் தீர்க்கமாக ஒலித்தவர் அண்ணா! ஒரு பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட்டின் பேச்சுக்கே பதில் சொல்ல முடியாத டெல்லி தற்போது 37 பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்களின் பேச்சுக்களுக்கும், சித்தாந்த கருத்துகளுக்கும் என்ன பதில் சொல்ல காத்திருக்கிறதோ.

மோடி

தாங்கள் உயிரிழந்த பிறகும் தங்களது கொள்கைகளால் அதிகாரவர்க்கத்தை அலறவிட்டு கொண்டிருக்கின்றனர் பெரியாரும், அம்பேத்கரும்! அவர்களது பக்தர்களை முதன்முறையாக சந்திக்க இருக்கிறார்கள் ஸ்ரீ ராமர்கள். இணைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் ராவணர்களை சந்திக்க இருக்கின்றனர் ராமர்கள். அந்த ராவணன் குறித்த வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று பலர் கூறுவதுண்டு. தற்போது இந்த ராவணர்கள் புதிய வரலாறை எழுத காத்திருக்கிறார்கள். இது அவர்களை உயர்த்தி பிடிக்க வேண்டுமென்பதற்காக அல்ல. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த முறையும் தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அம்பேத்கர், பெரியார்

எனவே தற்போதைய சூழலில் பெரியாரிஸ்ட்களும், அம்பேத்கரிஸ்ட்களும் டெல்லியில் இருக்க வேண்டும் என்பது அவசிய தேவை. மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் திட்டமா, மாநில சுயாட்சிக்கு இழுக்கா, சிறுபான்மையினர் மீது தாக்குதலா என இனி நாட்டில் எது நடந்தாலும் ஸ்ரீராமர்கள் பெரியாரிஸ்ட்களுக்கும், அம்பேத்கரிஸ்ட்களுக்கும், மார்க்சிஸ்ட்களுக்கும் நிச்சயம் உரிய விளக்கத்தை கொடுத்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் நடக்க ஆரம்பித்திருக்கும் பெரியார் Vs ஸ்ரீராமர் ஆட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமருக்கும், அவரது சகாக்களுக்கும் வரவேற்பும், வாழ்த்துகளும்....

ABOUT THE AUTHOR

...view details