தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னை போயஸ் கார்டன் அருகே இன்று நடைபெற்றது. அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், "கடந்த 14ஆம் தேதி துக்ளக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியது பெரியாரைக் கொச்சைப்படுத்தும் செயல். அதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம்.
காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையைக் காட்டி சான்று கூறுகிறார். அவை எல்லாம் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட புராணக்கதைகளை வைத்து வரையப்பட்ட ஓவியங்கள். ஆனால், நிர்வாணப் படங்களை ஊர்வலத்தில் எடுத்துவரவில்லை. பெரியார் ராமருக்கு எதிர் கருத்து கூறிவந்தவர்தான். ரஜினி இது மறுக்கக் கூடிய விஷயம் அல்ல, மறக்க வேண்டிய விஷயம் என்று கூறி இருக்கிறார். இந்த ஞானம் ஏன் அவருக்கு 14ஆம் தேதி வரவில்லை.
பெரியார் குறித்து அவதூறு பேச்சு - ரஜினி வீடு முற்றுகை பெரியார் ஊர்வலமாக சென்றதைக் கண்டித்து 1971ஆம் ஆண்டு அரசு பெரியார் மீது வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதனால் யாரும் புண்படவில்லை எனக்கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. இப்போது ரஜினி யாருடைய தூண்டுதலின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்