முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2014ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்து, எழுவர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய, கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானம் செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்தவொரு முடிவையும் ஆளுநர் தற்போது வரை எடுக்கவில்லை. இதனிடையே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருவதால் தன் மீதான தண்டனையை நிறுத்திவைத்து, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில், எதிர் மனுதாரர்களாக மாநில - மத்திய அரசுகள் இணைக்கப்பட்டன. இந்த முதன்மை மனுவோடு, மருத்துவ சிகிச்சைக்காக பரோல் கேட்டு மற்றொரு மனுவும் இணை மனுவாக, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்காடிவரும் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் அரசின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் மீது முன்வைக்கப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகள்:-
முதல் குற்றச்சாட்டு : உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ள பேரறிவாளனுக்கு ஏதேனும் மருத்துவ தேவை என்றால், வேலூர் சிறையிலுருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
பேரறிவாளன் தற்போது வேலூர் மத்திய சிறையில் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சென்னையை அடுத்த புழல் சிறையில் சிறைவாசியாக தண்டனையை அனுபவித்துவருகிறார். அது சி.எம்.சி மருத்துவமனையிலுருந்து ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதே போல, பேரறிவாளன் மருத்துவ தேவை குறித்து வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் தெளிவான வாதங்களை முன்வைக்கவில்லை என்றும் அறியமுடிகிறது.
சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மருத்துவம் பார்த்துவருகிறார். சென்னை மருத்துவக் கல்லூரியின் (அப்போதைய) தலைமை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுவந்த பேரறிவாளனின் உடல்நிலைக் குறித்து, பாலாஜி ஸ்ரீநிவாசன் முறையாக எடுத்துரைக்கவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைமை மருத்துவர், தற்போது விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சேவை புரிந்துவருகிறார். அவரிடம் தொடர்ந்து சிகிச்சைப் பெறவே பேரறிவாளன் தற்போது அங்குள்ளார். இதனை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் மறைத்துள்ளார்.
இரண்டாம் குற்றச்சாட்டு : நவம்பர் 3 ஆம் தேதி(2020) ஆம் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தீர்மானம் குறித்து, ஆளுநர் முடிவெடுக்காமல் காலம்தாழ்த்திவருவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. அத்துடன், பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஏன் இவ்வளது தாமதம் ? அவருக்கு ஆலோசனை வழங்கக் கூடாதா ? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் பதிலளிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இவ்விவகாரத்தில் பல்நோக்கு விசாரணைக்குழுவிடம்(எம்.டி.எம்.ஏ) அறிக்கை கேட்டுள்ளார். இதன் காரணமாகவே, இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.