காரணமே தெரியாமல், '9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரி'களை ஒற்றைக் கண் சிவராசனுக்கு வாங்கிக்கொடுத்தற்காக, 30ஆண்டுகள் சிறையிலிருந்து வருகிறார் பேரறிவாளன். இதுவரையிலான சிறைவாசத்தில் மூன்று முறை மட்டுமே அவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முதல் பரோல்
- 1991ஆம் ஆண்டில், சிறு விசாரணை என அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகள் கழித்து 2017இல்தான் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார்.
- 2017ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்த பேரறிவாளன், தனது தந்தை குயில்தாசனை காண பரோல் வேண்டி விண்ணப்பித்ததையடுத்து அதே ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 24ஆம் தேதி அவருக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரோல் வழங்கினார்.
- அதன்பின்னர், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த பேரறிவாளனுக்கு சில கட்டுப்பாடுகளோடு கூடுதலாக ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
- மொத்தம் இரண்டு மாதம் சிறைவிடுப்புக்கு பின்னர், அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் சிறை சென்றார்.
இரண்டாம் பரோல்
- சீறுநீரகப் பிரச்சனையினாலும், மூட்டுவலியிலும் கடுமையாக அவதிப்பட்டு வந்த பேரறிவாளன், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
- அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு உடல்நலம் குன்றிய தனது தந்தையை பார்க்கவும், அக்காள் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளவும், 30 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அதைத்தொடர்ந்து, நவம்பர் 12ஆம் தேதி கடும் நிபந்தனைகளுடன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
- அதன்பின்னர், அவரது தந்தை உடல்நலத்தை கருத்தில்கொண்டு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
- இந்த விடுப்பின்போதுதான், பேரறிவாளன் தனது அக்காள் மகள் கல்யாணத்தில் பறையடித்து நடனமாடிய காணொலி தமிழ் மக்களின் மனதை கனமாக்கியது.
மூன்றாம் பரோல்
- சென்னை புழல் சிறையில் சிறுநீரக தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, உடல்நிலையை கருத்தில்கொண்டு 90நாட்கள் பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
- அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.
- 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பேரறிவாளன் விடுப்பில் வந்தார். தொடர் மருத்துவ சிகிச்சைக்காகவும் அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டும், மேலும் இரண்டு வாரங்கள் பரோலை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
- அதைத்தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி அவர் சிறைக்கு திரும்பினார்.