சென்னை:தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கும் முன்னணி நடிகர் ஒருவரின் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதால் மற்ற மொழி பட நடிகரின் படத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பேரரசு ரசிகர்களின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்மானத் தமிழா! கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப்படம் வெளியாகி கன்னடப்படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப்படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப்படத்தை இழிவுப்படுத்தி நம் தமிழ்ப்படத்தையும், நம் தமிழ் நடிகரையும் கொண்டாடுவார்களா?
தமிழ் படங்களுக்கு கன்னடர்கள் தடை:மேலும் இடையில் தமிழ்ப்படங்கள் அங்கே வெளியிடக்கூடாது என்று கன்னடர்கள் போராட்டங்கள் செய்தனர். கலவரம் விளைவித்தனர். அதுமட்டுமல்ல தமிழ்ப்படங்களைக் கன்னடத்தில் டப் செய்து வெளியிடக்கூடாது என்ற நிலையும் தற்பொழுது அங்கே உள்ளது. ஒரு தமிழ்ப் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் அந்தப் படத்தைப் பற்றி மட்டும் விமர்சனத்தை வைக்கலாம் தவறில்லை.
ஆனால் அதேசமயம் ஒரு கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள் ஒன்றுக்குப் பல முறை அப்படத்தைப் பாருங்கள் தவறில்லை. ஆனால் அந்தப்படத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடி, தமிழ் படத்தை இழிவுபடுத்துவதும், கன்னட படத்தோடு தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு தமிழ்ப் படத்தைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல. இங்கே நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை.