சென்னை: மீன் விற்பனை அங்காடி பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்த காவல் ஆய்வாளரின் செயலை மீனவர்கள் பாராட்டி வருகின்றனர்.
பட்டாபிராம் தண்டுரை பகுதியில் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமானோர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வேளையில் கரோனா ஊரடங்கு காரணமாக மீன் அங்காடி மூடபட்டது.
பின்னர், ஆவடி மாநகராட்சி சார்பில் மீன் அங்காடியை இடித்து புதிய கட்டடம் கட்டவுள்ளதால் மீன் அங்காடி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வியாபாரம் செய்துவந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே மூடப்பட்டுள்ள மீன் அங்காடியை மீண்டும் திறக்கவேண்டுமென, பட்டாபிராம் காவல் நிலையம் எதிரிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷணன் தலைமையிலான காவல் துறையினர், மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் வரவழைக்கப்பட்டு, உடனடியாக மீன் அங்காடியை திறக்க காவல் ஆய்வாளர் ஏற்பாடு செய்தார்.
முடிவுக்கு வந்த மீன் அங்காடி பிரச்னை இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், “மீன் அங்காடி, அருகிலுள்ள ஆடு இறைச்சிக் கூடம் ஆகியவை ,சுமார் 2 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படவுள்ளது. அதுவரை பழைய கட்டடத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்” என உறுதியளித்தார்.
நீண்ட நாள்களாக நிலவி வந்த பட்டாபிராம் மீன் வியாபாரிகளின் இடப் பிரச்னையை ஒரு சில மணி நேரத்தில் தீர்வுகண்ட பட்டாபிராம் காவல் துறைக்கு வியாபாரிகள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.