தேர்தல் வந்தாலே அரசியல்வாதிகள் இலவச அறிவிப்புகளை மழையாய் பொழிவது வழக்கம். அதுபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாழ்வா சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இருபெரும் கட்சிகளும், போட்டி போட்டு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக பெண்களைக் குறி வைத்து அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவும், 1,500 ரூபாய் என அதிமுகவும் கூறியுள்ளன. மேலும், வாஷிங் மெஷின், பேருந்தில் கட்டண சலுகை, ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர் இலவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக அறிவித்துள்ளது.
திமுகவோ, கரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4 ஆயிரம் ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பால் விலை குறைப்பு, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், கூட்டுறவு நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாணவர்கள் கடன் தள்ளுபடி, இலவச டேப்லெட், இணையதள சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
கடந்த காலங்களில் டிவி, லேப்டாப், மிக்சி, கிரைண்டர், ஆடு, கோழி என இலவச அறிவிப்புகளே கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. அதுபோல், இம்முறையும் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான அறிவிப்புகளால் வறுமை ஓழியுமா, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறையுமா, பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும், முதலில் இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் உள்ளபடி, மாநிலத்தின் தற்போதைய கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய். 2016 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு மாநில நிதி சுயாட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. நிதிக்காக மத்திய அரசையே அதிகளவில் நம்பியிருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வரிப்பங்கீடு, உதவி மானியம் ஆகியவையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதைத்தான், 15 ஆம் நிதிக்குழு அறிக்கைப்படி தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதாக, சட்டப்பேரவையில் கூறினார், துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆம் நிதிக்குழு பங்கீடு மூலம் மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையும் குறைந்துள்ளது. இதுபோதாதென்று, மத்திய அரசு நேரடி வரிகளை உபரி வரியாகவும், கூடுதல் வரியாகவும் மாற்றி வருகிறது. இதனால் மத்திய வரித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கும் பங்கு குறைகிறது. அதேநேரத்தில் மத்திய அரசின் வரி வருவாய் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கரோனா தொற்று மாநிலத்தின் வருவாயை கடுமையாக பாதித்துள்ளது. அப்பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு 13,352 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரி, டாஸ்மாக் மதுபான வரி, பத்திரப் பதிவு வரி, உள்ளூர் வரிகள் ஆகியவையே மாநிலத்தின் பிரதான நிதி ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரி 5 ரூபாய் வரை குறைக்கப்படும் என திமுகவும், குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளன. மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் இருகட்சிகளும் தெரிவித்துள்ளன.