தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே தமிழ்நாடு போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதில், ஒரு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிரான டிஜிட்டல் ஆதார ஆவணங்களை தங்களுக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு உதவி அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதுபோல உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை, உயர் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக (அமிக்கஸ்கூரியாக) நீதிபதிகள் நியமதித்தனர். கடந்த 3 நாட்களாக இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.