தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை - ஓபிஎஸ் வலியுறுத்தல் - spread-dengue

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும் தக்க அறிவுரைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops-urges-to-take-precaution-action-to-prevents-spread-dengue-fever
டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை- ஓபிஎஸ் வலியுறுத்தல்

By

Published : Sep 22, 2021, 4:01 PM IST

சென்னை:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இச்சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கின்ற சூழலில், டெங்கு பாதிப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவெடுத்துள்ளதாகவும், உருமாறிய டைப் 2 வகை டெங்கு இப்போது இந்தியாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வகை டெங்கு, மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உடையது என்றும், இந்த டைப் 2 டெங்கு பாதிப்பு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கான உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதன் அடிப்படையில், மேற்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. டெங்கு வைரஸ், தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர்வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2,400ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்றுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,600ஐ கடந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

இதன்மூலம், நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடவிருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம்.

முன்னெச்சரிக்கை தேவை

'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் கடமை மாநில அரசிற்கும், பொதுமக்களுக்கும் உண்டு.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளவும் தக்க அறிவுரைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எச்சரிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு

ABOUT THE AUTHOR

...view details