சென்னை: தமிழ்நாடு அரசின் 'ஒன்றியம்' என்ற சொல்லாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஜூலை 19, 2019அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர், "வரக்கூடிய காலகட்டத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரப் போகிறது.
அப்படி வருகிற அந்த நேரத்தில் தேர்தலிலே நாங்கள் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும், செய்வோம்" என்று கூறினார்.
ஒருவேளை அந்தச் சொல்லாததில், 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையும், 'ஜெய் ஹிந்த் என்ற சொல் ஆளுநர் உரையில் இடம்பெறாததால் தமிழ்நாடு தலை நிமிர்ந்துவிட்டது' என்ற வாசகமும் அடங்கியுள்ளது போலும்!
திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து அரசை 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 23-06-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே அளித்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
ஒன்றியம் என்றால் என்ன?
அதிலே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, "இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி, அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், 'ஒன்றியம்' என்பது தவறான சொல் அல்ல என்றும், 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது' என்பதுதான் அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
'ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
ஆனால், அது பொருள் அல்ல. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி ஐந்தின்படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர, இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல. எனவே, 'Union of States' என்பதற்குப் பொருள் 'மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்' என்பதுதான்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனது பேச்சில் பேரறிஞர் அண்ணா 1963ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், ம.பொ.சி., ராஜாஜி அவர்களும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது என்றும், அதற்காகத்தான் ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மறைந்த தலைவர்கள் என்ன சொன்னார்கள்
கூட்டாட்சித் தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால், எந்தத் தலைவரும் இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று கூறவில்லை.
இன்னும் சொல்லப்போனால், "மாநிலங்கள் பிரித்து தரப்பட்டுள்ளது" என்றுதான் அறிஞர் அண்ணா அவர்களே 1963ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசி இருக்கிறார்.
அதாவது, மாநிலங்களை பிரித்துக்கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். எனவே, 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது' என்பதுதான் யூனியன் என்ற வார்த்தைக்குப் பொருள் என்ற வாதம் சரியானதல்ல.
மொத்தத்தில், 'மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்' என்பதுதான் 'Union of States' என்பதற்குப் பொருள் என்பதையும், இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதைத்தான் 'Union of States' என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதையும் இந்தத் தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேசமயத்தில், இந்திய அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'Government of India' என்றே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய நாட்டை ஆளும் ஓர் அரசைக் குறிப்பிடும்போது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்திய அரசு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான ஒன்றாகும்.
கருணாநிதி சொன்னது
ஆனால், தற்போதைய திமுக அரசோ 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் 'இந்தியப் பேரரசு' என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டு இருப்பதை, இந்தத் தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று சொல்வது நமது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
"ஒன்றிய அரசு" என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி
மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைபிடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை ஜீவாதாரப் பிரச்சனைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல், இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும், இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈஸ்வரன் மீது நடவடிக்கை வேண்டும்
அடுத்தபடியாக, சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், "ஆளுநர் உரை என்பது இந்த அரசு எந்த திசையிலே பயணிக்கப் போகிறது என்பதை காட்டுகின்ற உரை" என்று சொல்லிவிட்டு, 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை ஆளுநர் உரையிலிருந்து நீக்கியதால் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது" என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.
"ஜெய் ஹிந்த்" என்ற வார்த்தை ஆளுநர் உரையில் தவறுதலாகக்கூட விடப்பட்டிருக்கலாம். நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால், "ஜெய் ஹிந்த்" என்ற வார்த்தையை ஆளுநர் உரையிலிருந்து நீக்கியதால் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது" என்று கூறியது நியாயமா? இந்திய இறையாண்மைக்கு உகந்ததா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்தியச் சுதந்திர போராட்டக் காலத்தில், அடிமைப்பட்ட இந்திய மக்களின் மனங்களில் நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால் 'ஜெய் ஹிந்த்', 'வந்தே மாதரம்' என்ற வார்த்தைகள் அனைத்து பொது மேடைகளிலும் முழங்கப்பட்டன. இந்தச் சொல்லை முதன்முதலில் முழங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை ஆவார்கள்.
'ஜெய் ஹிந்த்' என்பது நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன் ஆகியோரின் வீர முழக்கம். தீரன் சின்னமலையின் தீரச்சொல். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் அடிக்கடி முழங்கப்பட்ட 'ஜெய் ஹிந்த்' என்ற சொல் வெற்றிக்கான வீர முழக்கச் சொல். 'ஜெய் ஹிந்த்' என்பது இந்திய விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீர முழக்கம்.
தாய்நாட்டின் ஒப்பற்ற சொல் 'ஜெய் ஹிந்த்'
இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாய் நாட்டை வணங்கும் ஒப்பற்ற சொல். 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தை சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திரச் சொல்.
இதன் பொருள் 'வெல்க இந்தியா' என்பதாகும். இந்திய நாடு விடுதலைப் பெற்ற நாளில் அனைத்து அஞ்சல்களிலும் 'ஜெய் ஹிந்த்' என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
'ஒன்றிய அரசு' என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம்!
இப்படிப்பட்ட இன்றியமையாதத் தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல், அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் 'தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது' என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்தச் சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட வெற்றிச் சொல். மக்களின் உணர்ச்சிகளை தட்டியெழுப்பிய சொல்.
இந்தச் சொல்லை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, நகைக் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றியம் என்பதில் என்ன பிழை? - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வைரமுத்து!