இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு நாளும் காலையில் செல்பேசியை திறந்தவுடனேயே, ’இன்றைய அறிமுக ஊக்கத்தொகையாக ரூ.10,000 + 2,000 வழங்குகிறோம். அதைக் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆட்டத்தைத் தொடங்குங்கள். லட்சக்கணக்கில் வெல்லுங்கள்’ என்ற செய்தி வருகிறது. வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமை ஒருபுறம், ஆன்லைன் ரம்மி ஆடி லட்சக்கணக்கில் சம்பாதித்தால் அது வருமானம் இல்லாத காலத்தில் உதவியாக இருக்குமே என்ற ஆசை ஒருபுறம் என இரண்டும் சேர்த்து ஆன்லைன் ரம்மிக்கு இளைஞர்களை அடிமையாக்குகின்றன.
அறிமுக ஊக்கத்தொகையாக ஆன்லைன் ரம்மி நிறுவனம் கொடுக்கும் பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன்பின் அந்த இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும். சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போது, ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.