தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி

அரும்பாக்கத்தில் எஞ்சிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி, மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது.

அரும்பாக்கம்
அரும்பாக்கம்

By

Published : Aug 1, 2021, 6:53 PM IST

Updated : Aug 1, 2021, 9:16 PM IST

சென்னையில் 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளத்திற்குப் பிறகு, கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களை அரசு அப்புறப்படுத்தி வந்தது.

அதன்படி மாநகராட்சி கொடுக்கும் தரவுகளின்படி, கூவம் நதிக்கரையோரம் ஆக்கிரமிப்பு எனக் கணக்கிட்ட மாநகராட்சியின் கணக்கில் மொத்தம் 14,000 வீடுகள் இருந்துள்ளன.

இவற்றில் 12,000 வீடுகள் 2017ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாற்று வீடு

அரும்பாக்கத்தில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியதில் 243 வீடுகள் அடையாளம் காணப்பட்டதில், இவர்கள் அனைவருக்கும் சென்னையிலிருந்து பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டது.

ஆனால், அங்குபோக மறுத்த மக்கள், சென்னை உள்ளே மாற்று வீடு வேண்டும் என்று தெரிவித்தனர். இவ்வாறு மாற்று இடத்திற்குப்போக 93 பேர் மட்டுமே சம்மதித்தனர். இப்படி சம்மதம் தெரிவித்த 93 பேருக்கும் புளியந்தோப்பில் மாற்று வீடு ஒதுக்கப்பட்டு, அவர்கள் புளியந்தோப்பில் குடியேறிவருகிறார்கள்.

இந்நிலையில் மீதமுள்ள 150 நபர்களும், தங்களுக்கும் தற்போது புளியந்தோப்பில் மாற்று வீடு வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்தனர்.

வீடுகள் ஒதுக்கி மறுகுடியமர்வு செய்யும்வரை, ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது

கோரிக்கை

மேலும் கூவம் நதிக்கரையோரம் காலி செய்யப்படும் வீடுகளில் சுமார் 22 பேர் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கும் மேல் அங்கு வாடகைக்கு இருந்து வருகிறார்கள். வீட்டின் உரிமையாளர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்பட்ட நிலையில், வாடகைக்கு இருப்பவர்கள் தங்களுக்கும் வீடு வேண்டும் என மற்றொரு கோரிக்கை வைத்தனர்.

அரும்பாக்கம் குடியிருப்பு

வியாழக்கிழமை வந்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டைக் காலி செய்யும்படி எச்சரித்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு எந்த வீட்டையும் மாநகராட்சி அலுவலர்கள் இடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

புளியந்தோப்பில் மாற்று வீடு ஒதுக்கப்பட்ட நபர்கள், இங்கிருந்த வீட்டின் மேற்கூரை, மற்ற பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையில் அரும்பாக்கத்தில் குடிசை வீடுகள் இடிக்கப்படுவதாக புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதில் பல புகைப்படங்கள் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி தகவல்

மாற்று வீடு வழங்கப்பட்ட 93 வீடுகள் மட்டுமே இடிக்கப்படும். மீதமிருக்கும் வீடுகள் இடிக்கப்படாது. அவர்கள் விரும்பியபடி உரிய வகையில் மாற்று வீடுகளில் அவர்கள் குடியேறிய பின்னர்தான், இடிக்கும் பணி தொடங்கும் என மாநகராட்சி சார்பாகத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலையறிந்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று (ஜூலை 31) அரும்பாக்கம் குடிசை வாழ் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

இதுகுறித்து அவர் பேசுகையில், "அரும்பாக்கம் குடிசை வாழ் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தோம். மாற்று வீடுகள் புளியந்தோப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலர்கள் அதன்படி அரும்பாக்கம் வந்துள்ளனர். ஓடுகள் இடிக்கப்பட்டது. மக்கள் பொருள்களை அப்புறப்படுத்தியுள்ளனர். வாடகைக்கு இருக்கும் 22 பேருக்கும் வீடுகளை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். விரைவில் அமைச்சர், மாநகராட்சி அலுவலர்களை சந்திக்கவுள்ளோம்" என்று தெரிவித்த பின்னர் மாநகராட்சி ஆணையரை சந்தித்துப் பேசினார்.

குறைகளைக் கேட்டறிந்த சீமான்

மேலும், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தங்களது குறைகளைக் கூறினர்.

குறைகளைக் கூறிய மக்கள்

"மக்களை வெளியேற்றுவதில் திமுக, அதிமுக என்று வேறுபாடில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எப்படிக் கொடுத்தார்கள். இந்த இடம் யாருக்கு வழங்கப்பட உள்ளது? எந்த நோக்கில் பயன்படுத்தப்பட உள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார், சீமான்.

தங்கள் குறைகளை அங்கிருந்த சாரா பேகம் என்பவர் நம்மிடம் பேசுகையில், "நாங்கள் இங்கே 20 வருடத்திற்கும் மேல் வாடகைக்கு வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்த முகவரி உள்ளது. தற்போது இங்கிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைகளைக் கேட்டறிந்த சீமான்

குடியிருப்புகளில் வீடுகள்..

ஆனால், வாடகைக்கு இருக்கும் எங்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சிலருக்கு ரேஷன் அட்டையும் உள்ளது. ஆனால், அவர்களுக்கும் வீடு ஒதுக்கப்படவில்லை.

இதுபோன்ற 22 குடும்பங்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன் நாங்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தோம். ஆனால் எங்களுக்குத்தர மறுத்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

பின்னர் இவர்களின் குறைகளை நீக்க எஞ்சிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி மறுகுடியமர்வு செய்யும்வரை, ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள நபர்களுக்கு விதிகளுக்குட்பட்டு குடிசைப்பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதையும் படிங்க: 'யமுனா ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு... 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்!'

Last Updated : Aug 1, 2021, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details