சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கூறப்பட்டது.
இந்நிலையில் ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணையானது நடந்து வருகிறது.
மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
இந்த வழக்கு விசாரணைக்காக சிறைத்துறை ஓய்வுபெற்ற எஸ்பி அன்பழகன், ஓய்வுபெற்ற ஜெயிலர் ஜெயராமன், உதயகுமார், ஓய்வுபெற்ற தலைமை வார்டன் சங்கர்ராஜ், துணை ஜெயிலர் ராஜேந்திரன், துணை ஜெயிலர் உதயகுமார், வார்டன் ராம்ராஜ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார்கள்.
ராம்குமார் உடல் திசுக்களில் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையத்தில் ஹிஸ்டோபேதாலஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது ராம்குமார் மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ராம்குமார் உடல் உடற்கூராய்வு குழுவின் பொறுப்பாக இருந்த தலைமை மருத்துவர் செல்வக்குமார் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
உடலில் மின்சாரம் தாக்கவில்லை
மூன்று மணிநேரம் அவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணை வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்தது. குறுக்கு விசாரணையின் போது மருத்துவர் செல்வகுமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஹிஸ்டோபேதாலஜி நிபுணர் குழு ராம்குமாரின் உடலில் உள்ள திசுக்களில் மின்சாரம் தாக்கவில்லை என்று தங்கள் அறிக்கையில் கூறுவதால் மட்டுமே மின்சாரம் தாக்கி இறக்கவில்லை எனத் தெரிவிக்க முடியாது.
சில சமயங்களில் மின்சாரத்தால் தாக்கி இறப்பவர்கள் உடலில் உள்ள திசுக்கள் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராம்குமாரின் உடலில் காணப்பட்ட மின்சார தீக்காயங்கள் மற்றும் தடய அறிவியல் துறை மின் வேதியியல் அறிக்கை அடிப்படையிலேயே மின்சாரம் தாக்கி இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் தான் தெரிவித்துள்ளேன்.