சென்னை:பிரதமரின் பயிர் காப்பீட்டுத் (Crop Insurance) திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவுச் சங்கங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது.
இதுவரை 20.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் உழவர் காப்பீடு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு...
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- மதுரை
- புதுக்கோட்டை
- கரூர்
- சேலம்
- திருப்பூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- தேனி
- ராமநாதபுரம்
- திருச்சி
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- தருமபுரி
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- சிவகங்கை
- கடலூர்
- திருவள்ளூர்
- ஈரோடு
ஆகிய 26 மாவட்டங்களில் இன்றோடு முடிவடைகிறது. கனமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்க வேண்டும் என உழவர் கோரிக்கைவிடுத்தனர்.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 26 மாவட்டங்களுக்குப் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30ஆம் தேதிவரை அவகாசம் வழங்கக் கோரி ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் கடிதம் குறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் 2021-22ஆம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிர்களை இன்றைக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உழவரின் நலன் கருதி நேற்றும் (நவம்பர் 14), இன்றும் (நவம்பர் 15) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முழுவீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு (Crop Insurance) செய்யாத உழவர் உரிய ஆவணங்களுடன் நேற்றும், இன்றும் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி பதிவுசெய்து பயனடையுமாறு தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயிர்சேதம்: முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு