நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
'ஒரு சொட்டு மழைநீர்கூட வீணாகக் கூடாது' - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை: வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு மழைநீர்கூட வீணாகாமல் சேகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டவை பின்வருமாறு:
• சென்னை போன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் முகாம் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்கள், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறையினர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி கரோனா வைரஸ் தொற்றை தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
• சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு, மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றின் பணிகள் முடிவுற்ற நீர்நிலைகளை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.
• மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 585 ஏரி, குளங்கள், குட்டைகள் பேரூராட்சிகளில் உள்ள 2,366 நீராதாரங்கள் ஆகியவற்றில் கடந்த ஆண்டு முதலே பராமரிப்புப் பணிகள், கரைகளைச் சீரமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள் போன்றவை நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
• மேலும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு மழைநீர்கூட வீணாகாமல் சேகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான விவரங்களை 15 நாள்களுக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.