நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத பிற தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கரோனா ஊரடங்கு சூழலில் அனைத்து தரப்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, நலவாரியங்களில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கும், பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தலா 1000 ரூபாய் என 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜூன் மாதத்தில் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அது தவிர அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் என இருதரப்புமே இதில் பயன் பெற்றிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.