தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான இணையதள கலந்தாய்வு கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு லட்சத்து மூன்று ஆயிரத்து 330 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்தாய்வின் முடிவில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 83 ஆயிரத்து 396 மாணவர்கள் சேர்வதற்கு இடங்களைத் தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வழங்கியது, அதனைத் தொடர்ந்து மாணவர்களும் கல்லூரியில் சேர்ந்தனர். பொறியியல் படிப்பில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு மருத்துவப் படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவப் படிப்பிற்கான இடங்களைத் தேர்வு செய்து அங்கு சேர்ந்துள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதிக்கு மேல் நடத்த முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல எந்தக் கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தாலும் அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.