தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பில்லை: நீதிமன்றம் - முதல் தவணையை செலுத்த கால அவகாசம்

no extension for paying first installment
no extension for paying first installment

By

Published : Sep 23, 2020, 3:59 PM IST

Updated : Sep 23, 2020, 5:41 PM IST

15:51 September 23

சென்னை:தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து 75 விழுக்காடு கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும், அதில் 40 விழுக்காடு கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் எனவும் ஜூலை 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அதன்பிறகு முதல் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப். 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை துணை செயலாளர் கே. ஜெயலலிதா கூடுதல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.  

அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 97 நிரூபிக்கப்படவில்லை என்றும், ஒன்பது பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 100 விழுக்காடு கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரின் புகார் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த 9 பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை என சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, குழந்தைகளின் நலன்கருதி பெற்றோர் புகாரளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால், தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்ட நீதிபதி, புகார்களை பெற்று அதனடிப்படையில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், அதை நீடிப்பது குறித்து பள்ளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க போவதில்லை என நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டு வழக்கு விசாராணையை தள்ளிவைத்தார்.

Last Updated : Sep 23, 2020, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details