நில அபகரிப்பு வழக்கு: குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? உயர் நீதிமன்றம் - Land grabbing
சென்னை: நில அபகரிப்பு புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்யாதது ஏன் என காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க செங்கல்பட்டு எஸ்பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நரசிம்மன், காட்டாங்குளத்தூர் கோனாதி கிராமத்தில் வரதராஜுலு என்பவரிடம் இருந்து 25 சென்ட் நிலம் வாங்கி செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1964இல் பதிவும் செய்துள்ளார்.
இந்நிலையில், நிலத்தை சிலர் அபகரித்து, கட்டடம் கட்டியுள்ளதை அறிந்த நரசிம்மன், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் வேளச்சேரியைச் சேர்ந்த வீரபத்திரன், முனுசாமி, கட்டட கான்ட்ராக்டர் குமாரராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி முனுசாமி, குமாரராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனது நிலத்தில் உள்ள கட்டடத்தை இடித்து அகற்றக் கோரி நரசிம்மன், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, செங்கல்பட்டு எஸ்பி பதில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முன் ஜாமீன் மனு 2018இல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை குறித்து பதில் மனுவில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, இது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க அப்போதைய காஞ்சிபுரம் எஸ்பியான, தற்போதைய செங்கல்பட்டு எஸ்பிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.