இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியும், ஈரோடு மருத்துவக் கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக எழும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திவரும் நிலையில், அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியும், பல் மருத்துவக்கல்லூரியும் தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கையை 2013ஆம் ஆண்டுமுதல் நடத்திவருகிறது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்னும் பெயரில் செயல்பட்டுவரும் நிலையில், அக்கல்லூரியின் கல்விக்கட்டணம் தனியார் கல்லூரியாகச் செயல்பட்டபோது இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுவருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலம், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் அப்போது மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் கட்டணத்தை ரூ.5.44 லட்சமாக அதிகரித்து அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கொதிநிலையை உருவாக்கியிருக்கிறது.
அதேபோல, ஈரோடு மாவட்டம், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்திவரும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ.3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
இந்த இரு மருத்துவக் கல்லூரிகளையும் அரசே ஏற்றுக்கொண்ட பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது, இதர அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத்தான் இக்கல்லூரிகளிலும் நிர்ணயித்திருக்க வேண்டும்.