சட்டவிரோத மணல் திருட்டு
சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கக்கூடிய மெரினா கடற்கரையின் முகத்துவாரத்தில் இரவு, அதிகாலை நேரங்களில் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்கு ஒட்டிய பகுதியில் செல்லும் சிறிய பாதை வழியாக இந்த மணல் லாரிகள் கூவம் ஆறு கடலில் கலக்கக் கூடிய முகத்துவாரம் வரை சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்வதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த மீனவர் தந்தை கே.ஆர். செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆய்வு செய்ய குழு அமைப்பு
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு, மணல் திருட்டு நடந்த முகத்துவாரப் பகுதியை ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அலுவலர், தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், சென்னைக் மாநகர காவல் ஆணையாளர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.