தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, மருத்துவ துணை கண்காணிப்பாளர் ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 250 இடங்களில் 249 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் இந்தாண்டு அகில இந்திய அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு முதல் 30நாட்கள் மருத்துவத்துறையின் கொள்கைகள், நோயாளிகளுடன் பழகும் முறைகள், நோயாளிகளுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்குரிய பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படவுள்ளன.