சென்னை:தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தலைமையக அலுவலகம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தாம்பரம் திறந்து வைத்தார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்உடனிருந்தார்.இந்த விழாவில் பேசிய சர்பானந்தா சோனோவால், "சித்த மருத்துவத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தால் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய தலைமையக அலுவலகம் அனைத்து வகை தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாபெரும் தமிழ் சித்தர் "அகத்தியர்" சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. சித்தா மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா முறை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒரு உச்ச அமைப்பாகும். இதன்மூலம் 623 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்க:சிசிஆர்எஸ் மற்றும் என்ஐஎஸ் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அமுக்கரா சூரண மாத்திரைகளை வழங்கியுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நன்கு அறிவேன். கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டதையும் அறிவேன். இதற்காக அரசுக்கு நன்றி.
இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். உள்ளூர், உள்நாடு என்றில்லாமல் உலக அளவில் வீறுநடை போட வேண்டும் என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் சித்த மருத்துவமுறைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. மூலிகைப் பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். “இளஞ்சி மன்றம்” என்ற இளஞ்சிறார் மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும். ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் ஏழு சித்த ஆயுஷ் நல மையங்கள் மற்றும் ஒரு தேசிய ஊரக நலத்திட்ட சித்த பிரிவு ஆகியவற்றை 8 இடங்களில் மாற்றி நிறுவப்படும். மேலும், டாம்ப்கால் நிறுவனத்தின் மூலமாக புதிதாக அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்திய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தினை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சித்த மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க:கொளத்தூரில் ரூ.12.30 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்