சென்னை: திருச்சியில் இன்று ஜமால் முகமது கல்லூரியினுடைய நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்க விழா, குளோபல் ஜமாலியன் பிளாக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
பிறகு பேசிய அவர், இந்திய அளவில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 100 கல்லூரிகளில் 65 ஆவது இடத்தில் ஜமால் முகமது கல்லூரி இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இது இன்னும் முன்னோக்கி வர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை நான் சொல்ல விரும்புறேன் என குறிப்பிட்டார்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக இருந்தாலும், அனைவரும் பயிலும் நிறுவனமாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இணைந்து பயிலக்கூடிய கல்லூரியாகவும் இருக்கிறது. அந்த வகையில் சமத்துவக் கல்லூரியாகவும், இந்த ஜமால் முகமது கல்லூரி செயல்பட்டு வருவதை அறிந்து நான் பாராட்டுகிறேன் என தெரிவித்த அவர் இந்திய அரசு சார்ந்த நிறுவனங்களின் நிதி உதவியை பெற்று ஆராய்ச்சிகள் செய்து வரும் நிறுவனமாகவும் இது இருக்கிறது என்றார்.
இசை நாடகக் கலை மன்றம், தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணி. இளையோர் ரெட் கிராஸ் போன்ற அமைப்புகளும் இங்கு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டெல்லியில் நடைபெறக்கூடிய குடியரசு தின அணிவகுப்பில் கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுத்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய தனித்திறமைகளை வளர்ப்பதில் அனைத்துக் கல்லூரிகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றைத் தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத் தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவுத் திட்டம். அதனால் தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன் என பெருமிதம் கொண்டார்.
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் தான் “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம். நேற்றைக்குக்கூட இந்தத் திட்டத்தினுடைய ஒரு பகுதியாக “கல்லூரிக் கனவு” என்கிற உயர் கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன் என்பதை நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க:டிடிவி தினகரனோடு ரகசிய உறவாடும் ஓபிஎஸ்.. ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு