ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினியை, இலங்கையில் வாழும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் உள்ள தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலமாக பேச அனுமதி வழங்கக்கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இவர்கள் இருவரையும் வீடியோ கால் மூலம் வெளிநாடுகளில் வாழ்பவர்களுடன் பேச அனுமதித்தால் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படக்கூடும் எனவும் அரசு தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அதற்கான ஆதாரங்களும் இல்லை.
உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களுடன் பேச சிறை விதிகளில் எந்த தடையும் இல்லை எனும் நிலையில், மற்ற கைதிகளுக்கு அனுமதி அளிப்பதுபோல், முருகன் நளினிக்கு மட்டும் அனுமதி மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயல். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுடன் பேச சிறை விதிகளும் தடை விதிக்கவில்லை எனும்போது, நீதிமன்றமும் அதற்கு தடை விதிக்க முடியாது” என வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதி ஹேமலதா, சிறைகளில் அலைபேசி, சிம் கார்டு சார்ஜர் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது கரோனா காரணமாக கைதிகள் உறவினர்களுடன் பேச அலைபேசிகளை பயன்படுத்த அனுமதியளித்து அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.