தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி குறித்த ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எம்பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு - puducherry jipmer hospital

ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல். இந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தி குறித்த ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எம்பி சு வெங்கடேசன் கடும் எதிர்ப்பு
இந்தி குறித்த ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எம்பி சு வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

By

Published : May 9, 2022, 5:24 PM IST

இது குறித்து இன்று (மே9) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது.

ஏப்ரல் 28, 2022 அன்று ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (JIPMER) இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது.

ஒரு சுற்றறிக்கை No/HC/OLI/2022 அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு 3 (3) ஐ குறிப்பிட்டு அதன்படி பொது ஆணைகள், அறிவிக்கைகள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள், ஊடக செய்திகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உரிமங்கள், அனுமதிகள், விலை கோரல் (ஒப்பந்தம்) மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இரண்டாவது சுற்றறிக்கை No/OL impel/2022 அதே தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் அதிர்ச்சியை தருகிறது. அது சொல்வது என்னவென்றால் ”அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படும். எதிர்கால பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தியில் மட்டுமே செய்யப்படும்"

இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்தி பிரிவால், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளதாம். இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது?
என்னைப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு "இந்தி செல்" என்ற பெயரே சரியில்லை. அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் "OLI Cell" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அக்குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கருதுகிறேன். அந்த "செல்" சட்டத்தின் படியே செயல்பட வேண்டும்.

"இந்தி மட்டும்" என்ற உறுதி மொழி, சட்ட நியதிகளை கடந்தது ஆகும். உண்மையில், ஒன்றிய அரசின் துறை மற்றும் நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில் செய்வதை தான் ஊக்குவிக்க வேண்டும். ஆகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/OL imple/ 2022 திரும்பப் பெற வேண்டும். உடனடியாக இத்தகைய நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் மரு. ராகேஷ் அகர்வால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்- சவால் விடும் திமுக எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details