சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் துச்சேன் தசை சிதைவு என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அவனது தாய் முதலமைச்சர் தனிப்பிரிவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தனிப்பிரிவில், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 8 வயது சிறுவனின் தாய் வெண்ணிலா தனது மகன் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனக் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
8 வயது சிறுவன்
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வெண்ணிலா கார்த்திகேயனின் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகனான 8 வயது சிறுவன் துச்சேன் தசை சிதைவு (Duchenne muscular dystrophy -DMD) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோய் சிறுவன் பிறக்கும் போது இல்லை. மாறாக அவருக்கு 4 வயது இருக்கும் போது பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆறு வயதில் பள்ளிக்கு சென்ற சிறுவன் வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் இயல்பாக நடக்க முடியாமல் கீழே விழுந்துள்ளார். ஆசிரியர்களின் அறிவுரைப்படி பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.