சென்னை: சேத்துபட்டில் நடைபெற்ற தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநிலத்தலைவராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி ஏற்பு விழாவில் பேசுகையில், 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி, ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் தலைவராகப்பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'தமிழ்நாடு சார்ந்த சாரணர் இயக்கத்திற்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று கூறுகின்றனர். இனிமேல் தான் எங்களுக்கு போட்டியே இருக்கிறது. இந்த இயக்கத்தில் தற்போது 4 லட்சம் சாரண சாரணியர்கள் உள்ளனர். இதனை 10 லட்சமாக உயர்த்த வேண்டி உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லும்பொழுது பள்ளி சார்ந்த இயக்கம் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளேன்.
சாரண சாரணிய இயக்கத்தில் ஏற்கெனவே 19 முகாம்கள் உள்ளன. அந்த முகாம்களை மீண்டும் நடத்த வேண்டும் என ஒரு முயற்சி உள்ளது. மாவட்ட மாநில அளவிலும் தேசிய அளவிலும் இந்த முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
சாரண சாரணியர் இயக்கம் உள்ளிட்டப் பிற செயல்பாடுகளை எவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கலாம் என்பது குறித்து வரும் 21ஆம் தேதி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். சாரண சாரணியர் இயக்கத்திற்கு முதல் முறையாக 27 லட்ச ரூபாய் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் தொடர்ந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து வரும் காலங்களில் நிதி அதிக அளவில் ஒதுக்கப்படும்.
மாநில தலைமை அலுவலகம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு மகாத்மா காந்தி வந்து சென்றார் என்பது வரலாறு. அந்த இடத்தில் மேலும் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான அனுமதி பெறுவதற்கு முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்போம்.