சென்னை: நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 140 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 96,069 மாணவர்கள் பொறியியல் இடங்களை தேர்வு செய்துள்ளனர் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு 83,396 பேரும், கடந்த ஆண்டு 78 ஆயிரத்து 682 பேரும் இந்த ஆண்டு 95 ஆயிரத்து 69 மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் மாதம் தொடங்கிய கலந்தாய்வு தற்போது முடிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 16 பொறியியல் கல்லூரியில் 100 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளது. ஆனால் கடந்தாண்டு 13 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பியது.