சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரையின் முதல் பொதுக்கூட்டம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "எங்கள் கல்வி, எங்கள் எதிர்காலம், பெண்களின் மானம் இவை எதுவும் விற்பனைக்கு அல்ல; நானும் விற்பனைக்கு அல்ல. என்னை விலைக்கு வாங்க முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் நான் விலைபோகவில்லை. இனி ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.
நாளை, நாளை மறுநாள் என அடுத்தடுத்து நல்ல செய்தி வர போகிறது. எங்களுடன் சேர்ந்து பயணிக்க வர வேண்டியவர்கள் யோசிக்காதீர்கள். இன்னும் 3 நாள்கள் நேரம் கொடுக்கிறேன். வாருங்கள் சேர்ந்து பரப்புரைக்குப் போகலாம். நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளும் நேரம் இது. தேர்தலில் பணபலத்தால் வென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.
தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பேச முடியவில்லை என்று சிலருக்கு இப்போது வரும் திடீர் பாசம் தேர்தல் நேரத்தில் பொங்கி வருவது எதற்காக என்று நமக்கு நன்றாகவே தெரியும். திருக்குறளைத் தவறாகச் சொன்னால் மதிப்பெண் வழங்குவோமே தவிர, அவருக்கு வாக்களிக்க மாட்டோம். எங்கள் மொழி, பண்பாடு, கல்வி விற்பனைக்கு அல்ல.
மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனாலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கில் சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது காவல் துறை உயர் அலுவலரே, மற்றொரு காவல் துறை அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை வந்திருக்காது.
இப்போது ஒருவர் விவசாயி விவசாயி என்று சொல்கிறார். அவர் விவசாயி என்றால் நான் அமெரிக்கா அதிபர். விவசாயி என்பவர் மற்றவருக்குக் கொடுத்து வாழ்பவர். எங்கள் கட்சியில் உள்ள பெண்கள், ஆண்கள் மற்றவர்கள் செல்ல பயம் கொள்ளும் இடத்தில் கூட தைரியமாகச் செல்லும் அளவிற்கு இருக்கிறார்கள்.
மாநிலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் என இருந்த கடன், இப்போது ரூ.5 லட்சம் கோடியாக மாறிவிட்டது. இங்கு நடந்து கொண்டிருக்கும் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை இந்தத் தேர்தலில் காட்ட வேண்டும்.
ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்பது சாத்தியமான ஒன்று. திருடுவதை நிறுத்தினால் மூன்று தமிழ்நாட்டை உருவாக்கலாம். தற்போதைய அரசியலை மாற்ற வந்தவர்கள் நாங்கள். தமிழ்நாட்டு மக்கள் கைகொடுத்தால் தற்போதைய வீழ்ச்சியிலிருந்து நாம் எழ முடியும்" எனப் பேசினார்.