சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 16ஆவது பொதுத்தேர்தலில் 133 தொகுதிகளை வென்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, இன்று காலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர், பிற அமைச்சர்களின் பதவியேற்பு விழா தொடங்கியது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களை கொண்டு மிக எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது..
ஸ்டாலின் காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அதன்பின் வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதிடம், மு.க.ஸ்டாலின் அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக சார்பில் இல.கணேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மநீம தலைவர் கமல்ஹாசன், சமக தலைவர் சரத்குமார் ஆகிய முக்கிய தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.