இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவை கூடாத “சுகாதார பேரிடர்” கால நெருக்கடியைப் பயன்படுத்தி - பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020”-யை வெளியிட்டிருப்பதற்குத் திமுக சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே இருக்கும் 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மளமளவென பெருகவும், விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி சாலை அமைக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் - மாநில உரிமையைப் பறித்து நவீன நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், “திட்டம் தொடங்கும் முன்பே” பெற வேண்டிய “சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை” என்று புதிய அறிவிக்கை “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு” ‘கார்ப்பெட்’ விரித்துள்ளது.