இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26ஆம் தேதியன்று நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாளிகளை மட்டுமே மனத்தில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஈடுபட்டு - ஏற்கனவே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுள்- 15 சட்டங்களை ரத்து செய்துவிட்டது. மீதியுள்ள 29 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக்கி - தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட்டுப் பறித்துவிட்டது.
பல நூற்றாண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை- தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் ரத்துசெய்யும் முன்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் ஏதும் ஆக்கப்பூர்வமாக நடைபெறவில்லை. அந்தச் சட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் ஏற்கவில்லை. ஏன், எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் போக்காகும்!
தொழிலாளர் நலத் திட்டங்களை நிறைவேற்றி, என்றைக்கும் அவர்கள் பின்னால் ஆதரவளித்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் - கழகத்தின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் சார்பிலும் - நாடாளுமன்றம் மற்றும் வெளி அரங்கில் இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் - பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதைத் துஷ்பிரயோகம் செய்து, தொழிலாளர்களுக்கு மாறாத துரோகம் செய்துவிட்டது மத்திய பாஜக அரசு. அந்தத் துரோகத்திற்கு இங்குள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசும் சிறிதும் கருணையில்லாமல் கைக்கொடுத்து நிற்கிறது.
- பணியிடப் பாதுகாப்பு நல்வாழ்வு மற்றும் பணியிடச் சூழல்கள் சட்டத் தொகுப்பு,
- சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு,
- இந்தியத் தொழில் உறவுச்சட்டத் தொகுப்பு,
- ஊதியச் சட்டத் தொகுப்புச் சட்டம்