சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை, ஒன்றிய அரசின் மும்பை உருக்காலையில் உருக்கி, தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.11) அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கோயில்களுக்கு வருமானம்:2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றப்படும்.
அதன்மூலம், திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது.
இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமிராஜூ அவர்கள் தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது.
இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு, 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.