சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் இன்று, வடகிழக்கு பருவமழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, " 12 மாவட்டங்களில் இயல்பாகவும், 24 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பொழிந்துள்ளது. சென்னையில் மழை அதிகமாக பெய்தாலும், மூன்று மணி நேரத்தில் மழைநீர் வடிகால் வழியாக சென்று விடும் அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நகரில் தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 80% நீர் நிரம்பியுள்ளது. முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பலமாகவே உள்ளது. மாநகருக்கு எந்த பிரச்சனையும் இன்றி உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படும். எல்லா ஏரிகளிலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தூத்துக்குடியில் மழைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.