எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று, நோயாளிகளுக்கு அதிநவீன சிடி ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழகத்தில் 115 சிடி ஸ்கேன்கள் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த அதிநவீன சிடி ஸ்கேன் மூலம் ஆஞ்சியோ சிடி ஸ்கேன் இரண்டு வினாடிகளிலும், முழு உடலை 10 வினாடிகளிலும் ஸ்கேன் செய்ய முடியும்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை சிறப்பாக செயலாற்றி, கரோனா பாதித்த 1,100 குழந்தைகள் இதுவரை சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 64 ஆயிரத்து 193 குழந்தைகள் கோவிட் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். குழந்தைகளுக்கு கரோனா தொற்று 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பரவுகிறது. வளர்ந்த நாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் இரண்டாவது அலை கரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது.