மத்திய அரசின் சார்பில் ஆவாஸ் திவாஸ் (Awaas Diwas) வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், இன்று (நவம்பர் 21) டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள PMAY (G) பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் வேலுமணி பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்திட முன்னுரிமை வழங்கி செயல்பட்டுவருகிறார்கள்.
இத்திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கான அளவுத் தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழ்நாடு அரசு கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.50,000 கூடுதலாக வழங்குகிறது.
2016 முதல் 2020 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,27,552 வீடுகளில் இதுவரை 4,01,106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு 2,65,029 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,36,077 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,26,446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
2016 முதல் 2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ. 3,798.38 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ. 2,53,225 கோடி, கான்கிரீட் மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ. 2,637.76 கோடி என மொத்தம் ரூ. 8,968.39 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலின்படி இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற குடும்பங்கள் என நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகளைத் தவிர்த்து சுமார் 2,90,000 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.