தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2019, 12:47 PM IST

ETV Bharat / city

தேசம் முதல் மாநிலம் வரை... சுஜித்துக்கு அரசியல் தலைவர்களின் இரங்கல்!

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் வில்சன் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்குழந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

sujith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சுஜித் மறைவுக்கு தேசிய தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,
குழந்தை சுஜித்தின் மரணச் செய்தி வருத்தத்தை அளிக்கிறது. துயரத்தில் இருக்கும் அவர் பெற்றோர் உட்பட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில்,

'இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளித்தது. இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க மக்கள் ஆழ்துளைக் கிணறுகளை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் மீட்புப் பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றியினைக் கூறி மேலும் சுஜித் பெற்றொருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டரில்,

"இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. ஈடு செய்ய இயலாத குழந்தை சுர்ஜித்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்வீட்டில்,

"சுர்ஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்."

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில்,
"ஆழ்துளைக் குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்,

"சுஜித்தை இழந்துவாடும் அவரது பெற்றோர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தை சுஜித் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

மேலும் படிக்க: 'இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது' - ஸ்டாலின் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details