சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் இன்றுமுதல் திறக்கப்படுகிறது. இந்தச் சூழலில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகம், தடுப்பூசி சிறப்பு முகாம், வகுப்பறைகள் என அனைத்தையும் ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், "இன்றுமுதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏழாம் பருவம் (Semester) மாணவர்களுக்கு ஆய்வுக்கூடத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும்.
வகுப்பில் 20 பேர் மட்டுமே
ஒரு வகுப்பிற்கு 50 முதல் 60 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். ஆனால், தற்போது ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. கோயம்புத்தூர் போன்ற பல்கலைக்கழகத்தில் இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் வகுப்புகளும் பயிற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறேன்.
கல்லூரிகளுக்கு வந்திருக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி விடுதிகளிலும் ஒரு அறைக்கு ஒரு மாணவன் மட்டுமே தங்கவைக்கப்படுகின்றனர். நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டுவருகிறது.