சென்னை: அதிமுக கட்சியின் நிர்வாகியான பி. குமார் (ஆவடி குமார்) எழுதிய கழக முரசு எனும் மாத இதழ் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இதழை வெளியிட, ஜெயா கல்வி குழும தலைவர் கனகராஜ் முதல்பதியை பெற்றுக்கொண்டார். பின்னர் இணையவழி தமிழ் சங்கக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ் அறிஞர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்கு திருமாவளவனை ஏன் அழைக்கவில்லை: அமைச்சர் விளக்கம்...!
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அரியலூர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு நிகழ்வுக்கு மக்களவை உறுப்பினர் திருமாவளவனை அழைக்காதது குறித்த திருமாவளவனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து பேசினார்.
அப்போது மருத்துவக்கல்லூரி நிகழ்வு காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்ததாலும், தற்போது கரோனா காலம் என்பதால் அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
வேண்டுமென்றே நிராகரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. தற்போதுள்ள சூழலில் மருத்துவக் கல்லூரி விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்; இதனை திருமாவளவன் புரிந்துகொள்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
சாத்தான்குளம் காவல் கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நீதிபதி மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, நீதிபதிகள் மாற்றம் அரசின் நடவடிக்கைகள் இல்லை எனவும் அது நீதித்துறைக்கு உட்பட்டது என கூறிய அவர், 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகளை மாற்றம் செய்வது வழக்கமான ஒன்று தான், இதில் எந்த அரசியலும் இல்லை.
நீதிபதிகள் மாற்றப்பட்டதால் சாத்தான்குளம் வழக்கில் எந்த தொய்வும் இருக்காது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.