சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அலுவலர்கள், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அதில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 2 ஆயிரத்து 609 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் வலியுறுத்தினார். செப்டம்பர் மாதத்தில் ’ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானிடம் அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார். அதன்படி,
- 2020 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான அனைத்து 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை விலையில்லாமல் வழங்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
- பி.எம்.ஜி.கே.ஏ திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 5 கிலோ கிராம் என்ற விகிதத்தில் இந்திய அரசு 5 லட்சம் மெட்ரிக் டன் (5,36,005 மெட்ரிக் டன்) இலவச அரிசியை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு 5,01,649 மெட்ரிக் டன் அரிசியை, இதுவரை பயனாளிகளுக்கு விநியோகித்துள்ளது.
- சி.எம்.ஆர் மானியம் இரண்டாயிரத்து 609 கோடி நிலுவையில் உள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, இந்த மானியத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- ஏப்ரல் மாதத்தில் 4,15,831 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும், மே மாதத்தில் 4,66,025 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 56.50 கோடி ரூபாயாகும்.
- மே மற்றும் ஜூன் மாதங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கிராம் அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு என்ற விகிதத்தில் 35,732 மெட்ரிக் டன் அளவில் ஒதுக்கியுள்ளது. ஆனால், மாநிலத்தில் 4,00,782 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதால், கூடுதல் அரிசி, பருப்பை ஒதுக்க வேண்டும். என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடியில் அயராது உழைத்த காவலர்களுக்கு நினைவுப் பரிசு!