கரோனா நோய் சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
"கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் அதிகமான மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் தாயகம் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக தமிழ்நாடு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழ்நாடு அரசு கடிதங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஆவண செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மீனவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மீனவர்களை விரைவில் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இதர மாநிலங்களில் தங்கியுள்ள தமிழ்நாடு மீனவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர இயலாத நிலையில் அம்மீனவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.