சென்னை, ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மண்ணப்பன் தெருவில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். அப்போது அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஜெயக்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் பரப்புரையின்போது அவர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டே முத்தம் கொடுத்தவாறு பொதுமக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
ராயபுரம் தொகுதிக்கு விசிட் செய்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு அதிமுகவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் விஷமப் பரப்புரையில் ஈடுபட்டாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. திமுக ஒரு கொத்தடிமைக் கட்சி. அக்கட்சியினர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், காங்கிரஸ் காலில் விழுந்து வளம் கொழிக்கும் துறைகளில், குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வாங்கி வாழ்ந்தனர்.
அதிமுக அரசைப் பொறுத்தவரை மத்தியில் ஆளும் பாஜகவுடன் நல்லுறவைப் பேணி வருகிறது. மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கதான் மத்திய அரசுடன் உறவு கொண்டுவருகிறோம். திமுகவின் கலாசாரமே பெண்களையும், ஆதிதிராவிட மக்களையும் பழித்துப் பேசுவதுதான். ஆ.ராசா மன்னிப்பு கேட்டாலும் கடவுள் அவரை மன்னிக்க மாட்டார். தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
அதிமுகவிற்கு எந்த முகமூடியும் இல்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் முகங்கள் மட்டுமே இருக்கிறது. திமுகவின் தோல்வி பயத்தின் காரணமாகவே சேலத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் கூட்டணித் தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர்" என்று தெரிவித்தார்.