சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவை எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கிடையே அடுத்த தலைமை யார் என்ற போட்டி ஏற்பட்டது. இதன்விளைவாக அக்கட்சி தற்போது நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.
முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்துகொண்டு மோதிய சம்பவங்களும் தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தரப்புக்கு, ’ஏன் ஒவ்வொரு முறையும் நீதிபதியை மாற்றி, ஒரு சிறப்பு அமர்வை அமைக்கக்கோரி கடிதம் எழுதியவாறு உள்ளீர்கள்?’ என்று கடும்கோபத்துடன் கேள்வியெழுப்பியுள்ளது.
அதிமுகவின் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், 'அதிமுக கட்சி 2017ஆம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்தும் வழக்குகள் தொடர்ந்துள்ளதாக' குறிப்பிட்டுள்ளார்.