கரோனா தொற்று காரணமாக உயர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நேரடி விசாரணை நடைபெறவில்லை. குறைந்த அளவிலான வழக்குகள் மட்டுமே, காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டுவந்தது. இருப்பினும், இணையதள சேவை குறைபாடு போன்றவை காரணமாக வழக்கு விசாரணைகளை முழுமையாக நடத்த முடியாத சூழல் இருந்து வந்தது.
இதையடுத்து, பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாக, இன்றுமுதல் நீதிமன்றங்களில் சோதனை அடிப்படையில் நேரடி விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று (செப்டம்பர் 7) முதல் விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள், கறுப்பு நிற முழு கோட் அணிய தேவையில்லை என்றும், வெள்ளை நிற சட்டை, கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தின் வடக்கு வாசல் வழியாக மட்டுமே வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி ஆகியவற்றைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, வழக்கறிஞர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.