சென்னை:வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு, மலை ரயில் பாதையில் யானைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை ஆகியவை தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிராசன், நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் நேற்று (ஏப். 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது,அரசு தரப்பில் வனக்குற்றங்கள் தடுப்பு குழுவை அமைப்பது குறித்த பரிந்துரைகளை வழங்க குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த குழு மார்ச் 31ஆம் தேதி கூடி அலோசித்துள்ளதாகவும், அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே தரப்பு: மலை ரயிலில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்கப்பட்டாலும், அந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லை என வெளியான செய்தி குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், அதை மறுத்த தெற்கு ரயில்வே தரப்பு, ஹில்குரோவ், கல்லாறு, குன்னூர் ரயில் நிலையங்களில் ஆர்.ஓ. குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி ஆகிய ரயில் நிலையங்களிலும் ஏற்கனவே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
அரசு தரப்பு: ஊட்டி, கொடைக்கானல் மட்டுமல்லாமல் ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது அரசு தரப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக பெட்டிகடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் உணவு மற்றும் குடிநீர் விற்கமாட்டோம் என உத்தரவாதம் எழுதி வாங்கிக்கொண்டு, கடைக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?