சென்னை:கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜிட்டின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அம்மனுவில், "நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான ஆவணங்களைத் தாக்கல்செய்ய வெள்ளை, பச்சை நிறங்களான தாள்கள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தாள்கள் தயாரிப்பதற்காக 15 மில்லியன் டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும், ஒரு தாளை தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
வேண்டும் இ-ஃபைலிங்
இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உயர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்களில் தாள் இல்லா மனு தாக்கல்செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் (e-filing) என்னும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் போன்றவைகளில் இ-ஃபைலிங் முறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிப்படியாகத்தான் வரும்
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு நேற்று (செப். 10) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாட்டில் இ-ஃபைலிங் முறை ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளது. மனு தாக்கல்செய்யும் முறையிலிருந்து இ-ஃபைலிங் முறைக்கு மாறுவது படிப்படியாகத்தான் நடைபெறும்.
இ-ஃபைலிங் முறை தொடர்பாக மனுதாரர் காணொலி ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதால், அதை ஆங்கிலம், தமிழ் மொழிகளில் உருவாக்கி நீதிமன்றப் பதிவாளரிடம் தர வேண்டும்.
அனைத்து நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்படும் தாள்கள் ஒரே மாதிரியான ஏ4 அளவில் இருப்பது தொடர்பாக அரசிடமிருந்து அறிவிப்பாணை வரும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அதனால், உரிய அறிவிப்பாணை விரைவில் வரும் என்பதைத் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்றனர்.
மேலும், இவ்வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'மூன்று மாதத்தில் போலீஸ் ஆணையம்' - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு