தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இடைநீக்கமான மின் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குக - உயர் நீதிமன்றம் உத்தரவு - துறைரீதியான விசாரணையை ரத்து செய்து உத்தரவு

லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அலுவலர்களுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்குப் பின் புதிதாக துறைரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் பதவி உயர்வுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 13, 2022, 6:54 PM IST

Iசென்னை:சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவிப்பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இடைநீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி, தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி அவ்விருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று (செப்.13) விசாரணைக்கு வந்த போது, லஞ்ச வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இரு ஆண்டுகளுக்குப் பின், சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்குப்பின் இருவருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்த விசாரணையினை ரத்து செய்து விட்டு, 2021இல் இரண்டாவது முறையாக விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்கு விசாரணையும், ஒழுங்கு நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்ற நிலையில், துறைரீதியான விசாரணையை 13 ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் மேற்கொள்வதற்கான உரிய காரணங்களை அரசுத்தரப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறி, இருவர் மீதான துறைரீதியான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

துறை ரீதியான விசாரணைக்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க பிறப்பித்த உத்தரவை ஏற்று, உரிய கால நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு.

ABOUT THE AUTHOR

...view details