சென்னை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டம் மற்றும் பங்களாவுக்கு கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி, நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். சயான் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி அவரது மனைவி, குழந்தை பலியானார்கள். சயான் படுகாயமடைந்தார். இதையடுத்து, இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சயனானின் மனு
இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடைபெறவில்லை. பல சாட்சிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சயான் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஊட்டி மாவட்ட நீதிமன்றம் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு, ஊட்டி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.